NEWS

Search This Blog

Friday, 27 September 2019

கீழடி பற்றி - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ...பேட்டி

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட வேண்டும்
என்பதை உறுதிசெய்யும் இடமாக கீழடி விளங்குகிறது

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

இன்று (27-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கீழடிக்குச் சென்று, அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்வையிட்டார்.

அதன் பிறகு, தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம்

கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது :-

தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த கீழடியில் நிறபதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இது எனக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை அல்ல; ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் பெருமையாக இந்த கீழடி விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம், மத்திய தொல்லியல் துறை, தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எப்படி இந்த முயற்சி இப்போது வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறதோ, அதுபோலவே தொடர வேண்டும்.

இனிமேல்தான் அதிக அளவு கவனம் செலுத்தி இந்த அகழாய்வில் மத்திய அரசும் - மாநில அரசும் முழுமையாக ஈடுபட வேண்டும்.

கீழடி ஆய்வின் மூலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாகரிகம் எப்படி எல்லாம் மேன்மை மிக்கதாக இருந்திருக்கிறது என்பதை, இங்கு கிடைத்திருக்கும் பானை ஓடுகள் மூலமாகவும், அவற்றில் இருந்த எழுத்துகள், தங்கம் - இரும்புப் பொருட்கள், என இவைகள் எல்லாம்  மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றன என்பது பாராட்டுதலுக்குரிய ஒன்று.

கீழடிக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநிலம், சனோவ்லி என்ற இடம், தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் குஜராத் மாநிலம் - வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அதுபோல கீழடியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கீழடியிலும், அதே போன்ற உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அதேபோல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் ஆகிய மூவரும் தமிழ்நாட்டின் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் இன்றைக்கு கீழடியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் மத்திய அரசிடம் சென்று எடுத்துச் சொல்வதற்கு, அந்தத் துறையின் இணையமைச்சர் திரு.பிரகலாத் சிங் பாட்டீல் அவர்களை நேரடியாகச் சந்தித்து விளக்கமாகப் பேசியிருக்கிறார்கள்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் பகுதியில் 2004-ஆம் ஆண்டு அந்தப் அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, அதுவும் தொடர வேண்டும் என்ற அந்த வேண்டுகோளும் மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது, தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்படக்கூடிய சூழலை நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.

எனவே, நம்முடைய பண்பாடு - காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய கலாச்சாரம் - பாதுகாக்கப்பட வேண்டும்.

உடனடியாக மத்திய அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு மாநில அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கி அதற்குரிய அழுத்தத்தை தரவேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

*_The kalviseithi:  Group in WhatsApp!_*

*Link:-* https://chat.whatsapp.com/ERRIHAVk4EHDe7Y3hPK9HF

ADSENCE ADD